வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவிய இலங்கை! சர்வதேச அளவில் கவனம் ஈர்ப்பு
பாகிஸ்தானில் 33 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்
பாகிஸ்தானுக்கு தேயிலையை நன்கொடையாக வழங்கி உதவிய இலங்கை
பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கடந்த சூன் மாதம் முதல் பாகிஸ்தான் கடும் வெள்ளத்தினால் சிக்கி தவித்து வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
வீடுகள், உடைமைகளை இழந்த மக்கள் பலர் இடம்பெயர்ந்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த வார தொடக்கத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பாகிஸ்தானுக்கு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பாகிஸ்தானிய மக்களுக்கு இலங்கை தேயிலையை நன்கொடையாக அளித்துள்ளது.
கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதர் உமர் பரூக் பர்கியிடம், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தேயிலையை ஒப்படைத்ததுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தையும், பாகிஸ்தானுடன் ஒற்றுமையையும் தெரிவித்தார்.
கடும் பாதிப்புக்குள்ளான பாகிஸ்தானுக்கு இந்த உதவியை செய்ததன் மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தான் கவனம் ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் அல்லது சேதமடைந்ததாகவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.