பேரிழப்பு... ஜப்பான் நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த இலங்கை சகோதரிகள்: பகீர் பின்னணி
ஜப்பானில் புகலிடம் கோரிய இலங்கைபெண் ஒருவர் தடுப்பு முகாமில் சித்திரவதை அனுபவித்து பரிதாபமாக மரணமடைந்த நிலையில், அவரது சகோதரிகள் அந்த நாட்டு நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
7 மாதங்கள் தடுப்பு முகாமில்
இலங்கையின் கடவத்த மாவட்டத்தை சேர்ந்தவர் 33 வயதான விஷ்மா சண்டமாலி. மாணவருக்கான விசாவில் ஜப்பான் சென்றவர். விசா காலாவதி முடிவடைந்தும் தங்கியதாக கூறி கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் தடுப்பு முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
@Sandamali
அத்துடன் அவரது அகதி அந்தஸ்து கோரிக்கையும் ஜப்பான் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 2007 முதல் ஜப்பானிய தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டு மரணமடையும் 18வது வெளிநாட்டவர் விஷ்மா என கூறப்படுகிறது.
தடுப்பு முகாமில் இருந்த 7 மாதங்களில் விஷ்மா சுமார் 20 கிலோ அளவுக்கு உடல் எடையை இழந்ததாக, அவரை சந்தித்த சமூக ஆர்வலர்களால் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, அவரது இறுதி நாட்களில், விஷ்மா ரத்த வாந்தி எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்டு மாதம் வெளியான விசாரணை அறிக்கையில், தொடர்புடைய தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு
இருப்பினும், விஷ்மா மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி 13 ஊழியர்கள் மீது வழக்கு பதிய சட்டத்தரணிகள் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், விஷ்மாவின் சகோதரிகள் வயோமி மற்றும் பூர்ணிமா சார்பில் ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஷ்மாவுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாக அதில் குற்றம் சாட்டியுள்ளனர். 2022 மார்ச் மாதத்தில் இருந்தே இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து வருகிறது.
@Sandamali
உரிய மருத்துவ உதவி கிடைத்திருந்தால், விஷ்மா இறந்திருக்க வாய்ப்பில்லை என்றே வயோமி தெரிவித்துள்ளார். விஷ்மா தங்க வைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து 295 மணி நேர கண்காணிப்பு கமெரா காட்சிகள் மீட்கப்பட்டது. அதில் 5 மணி நேர காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2017ல் மாணவர்களுக்கான 15 மாத விசாவில் விஷ்மா ஜப்பான் சென்றுள்ளார். சிபா மாகாணத்தில் உள்ள ஜப்பானிய மொழிப் பள்ளியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், ஜப்பானில் சந்தித்த இலங்கை ஆண் நண்பர் ஒருவருடன் அவர் தனியாக தங்கி வந்துள்ளார்.
விசா காலாவதி தொடர்பில் கைது
ஆனால் 2018 மே மாதம் முதல் அவர் வகுப்புகளுக்கு செல்லாமல் தவிர்த்ததாகவும், இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் அவரை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து Shizuoka பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்ற துவங்கிய அவர், செப்டம்பர் மாதம் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் 2019 ஜனவரி மாதம் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் பொலிசாரை நாடி குடும்ப வன்முறை தொடர்பில் புகாரளித்துள்ளார். அவரது ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள், விசா காலாவதி தொடர்பில் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, இலங்கைக்கு திரும்ப அவர் முயற்சிகள் மேற்கொண்டும், கொரோனா ஊரடங்கு மற்றும் விமான சேவைகள் ரத்து காரணமாக தடுப்பு முகாமில் தங்க நேர்ந்துள்ளது.
2021 மார்ச் 8ம் திகதி, விஷ்மா மரணமடைந்துள்ளதாக இலங்கை பொலிசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தற்போது விஷ்மா விவகாரத்தில் நீதி கிட்டும் வரையில் வழக்கு தொடரும் என்றே சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |