வெளிநாடுகளுக்கு அடிமைகளாக விற்கப்படும் இலங்கை பெண்கள்
இலங்கையிலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எங்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை, சாப்பாடும் கொடுப்பதில்லை - பாதிக்கப்பட்ட பெண்கள் குமுறல்
இலங்கையின் மத்திய மாகாண நகரங்களான அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள வேலை நிறுவனங்களால் துபாய்க்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அடிமைகளாக அனுப்பப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுராதபுரத்தில் உள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் துபாய்க்கு 50-க்கும் மேற்பட்ட பெண்களை அடிமைத் தொழிலாளியாக வேலை செய்ய கடத்தியுள்ளது, அங்கு அவர்களில் பெரும்பாலோர் தற்போது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கொடூரமான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஏஜென்சி துபாயில் வசிக்கும் 3 பெண்களின் தலைமையில் இயங்கி வருவதாக இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.
துபாயின் பல்வேறு பகுதிகளில் வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்ற 50 முதல் 60 வரையான பெண்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக, இந்த மோசடியில் சிக்கி இறுதியாக இலங்கைக்குத் திரும்பிய அனுராதபுரத்தைச் சேர்ந்த துஷாரா நில்மினி தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
Representative Image
தனது முழுப் பெயரையும் வெளியிட வேண்டாம் எனக் கேட்ட சந்திரிகா, துபாயில் வீட்டு வேலை செய்யச் சென்று தற்போது அங்கு நிர்க்கதியான நிலையில் உள்ளார்.
அவர்கள் சுமார் ஒரு மாதம் ஏஜென்சியில் தங்கியிருந்ததாகவும், சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"பின்னர் அவர்கள் எங்களை இந்த பாதுகாப்பான வீட்டில் அடைத்தனர். அதன்பிறகு இரண்டரை மாதங்கள் ஆகின்றன. அவர்கள் எங்களுக்கு இங்கு உணவளிக்க கூட இல்லை. நான் இங்கு மிகவும் கஷ்டப்படுகிறேன். எங்களுடன் ஏஜென்சியில் சுமார் 50 பெண்கள் உள்ளனர். அவர்களில் சிலர் 3,4 மாதங்களாக இங்கே இருக்கின்றனர். அவர்கள் எங்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை, சாப்பாடும் கொடுப்பதில்லை, நான் சாப்பிடவேண்டுமென்றால், சாப்பாட்டை எப்படியாவது மறைத்துவைத்து கழிவறைக்கு கொண்டு வந்து சாப்பிடுவேன், ஏதாவது செய்து என்னை இலங்கைக்கு அழைத்து வாருங்கள்" என்று News 1st செய்தி நிறுவனத்துடன் தொலைபேசியில் பேசிய பொது கெஞ்சி கேட்டுக்கொண்டார்.
இது குறித்து துபாயில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இலங்கைக்கு பத்திரமாக கொண்டு வர இலங்கை அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குருநாகலில் உள்ள ஏஜென்சியில் உள்ள தரகர் மூலம் ஜூன் 30-ஆம் திகதி துபாய் சென்றதாக மற்றொரு இலங்கையர் தெரிவித்தார்.
அப்பெண் கூறுகையில், "நாங்கள் அங்கு சென்றபோது, அங்கு சுமார் 50 முதல் 60 பெண்கள் பிணைக் கைதிகளாக இருந்தனர். நான் துபாயில் உள்ள ஏஜென்சியில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். ஜூலை 22 ஆம் திகதி என்னை ஒரு வீட்டிற்கு அனுப்பினர். அங்குள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். 2 வாரத்தில் என்னை வேறு இடத்துக்கு மாற்ற நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
ஒரு மாதம் ஆகியும் எங்களுக்கு வேறு வழியில்லை, அதனால் என் கணவர் எங்கள் வீட்டை அடமானம் வைத்துவிட்டு அந்த பணத்தை ஏஜென்சியிடம் கொடுத்தார், எனது சம்பளத்தையும் பறித்துக்கொண்டனர்.
பிறகு, நான் அவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்று குரல் பதிவை கொடுக்க சொல்லி அவர்கள் அதை பெற்றுக்கொண்டனர்.
அதன்பிறகு, நான் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு நாங்கள் 500,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.
இலங்கையில், தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, வறுமையில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதனால் வெளிநாடுகளில் அடிமைகளாக சிக்கிக்கொள்ளும் இலங்கை பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.