நாடாளுமன்ற கலவரத்துக்கு இடையில் நடந்த சம்பவம்! கேள்விக்குறியான அமெரிக்க தேசிய பாதுகாப்பு!
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதளுக்கு இடையில் காணாமல் போன மடிக்கணினிகளால், தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் வெற்றிக்கு காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான ஒப்புதல் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த புதன்கிழமை அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே வரை சென்று கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது அணைத்து அலுவகங்களுக்குள்ளும் புகுந்து அதிகாரிகளை தாக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜன்னல் கண்ணாடிகள், பொருட்கள் மற்றும் அங்கிருந்த ஆவணங்களை சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் ஜனநாயக்கத்தைப் பெறும் கேள்விக்குறியாக்கியது. மேலும், பல்வேறு நாட்டுத் தலைவர்களிடமிருந்தும் கண்டனங்களை பெற்றது.
இந்நிலையில், அன்று நடந்த கலவரத்தில் குறைந்தது 2 அதிகாரிகளுடைய மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அபாயங்களை அமெரிக்க சந்திக்க நேரிடும் என டிஜிட்டல் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் மைக்கேல் ஷெர்வின் கூறுகையில், "என்ன நடந்தது, என்ன திருடப்பட்டது, எது இல்லை என்பதை சரியாக அறிய பல நாட்கள் ஆகும்.
செனட்டர்களின் அலுவலகங்களில் இருந்து பொருட்கள், மின்னணு பொருட்கள் திருடப்பட்டன.
ஆவணங்கள், பொருட்கள், திருடப்பட்டன, மேலும் என்னவெல்லாம் செய்யப்பட்டது என்பதை நாம் அடையாளம் காண வேண்டும்." என்றார்.
காணாமல் போன கணினிகளைப் பயன்படுத்தி நெட்ஒர்க்குகளுக்கு உள்ளேயும் மற்ற முக்கிய தரவுகளையும் அணுக முடியாத அளவிற்கு உரிய அதிகாரிகள் அதில் போதிய அளவிலான பாதுகாப்பை மேற்கொண்டுள்ளனரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கலகக்காரர்களிடையே திறமையான ஹேக்கர்கள் அல்லது உந்துதல் உளவாளிகள் இருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மேலும் தரவு மீறல் குறித்த எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.
ஆனால் இது அமெரிக்க கேபிடல் பொலிஸ் மற்றும் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் இப்போது கருத்தில் கொள்ள வேண்டிய பெரும் ஆபத்து என்று சைபர் தயார்நிலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கியர்ஸ்டன் டோட் கூறியுள்ளார்.
