பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு - சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் இதோ!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் இருக்கும் கடற்படையினருக்கும் மீனவ சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 22 ஆம் திகதி தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், முதலில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 24 ஆம் திகதி வாக்கில் வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக குவிய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும்.
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இலங்கை முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |