பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற சக மாணவியின் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்
மாணவன் கொலை வழக்கில் பெண் கைது.
பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சக மாணவியின் தாய்.
இந்தியாவில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சக மாணவியின் தாயாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் காரைக்காலில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் மகன் பால மணிகண்டன் (13). தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியின் ஆண்டு விழா நடைபெறவுள்ளதால் அதையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
காலை 11 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் வந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரிடம், எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். அவர் உடனடியாக வகுப்பறையில் இருந்த பால மணிகண்டனிடம் அதனை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளான்.
பின்னர் மணிகண்டன் வீட்டுக்கு செல்லும்போது வாந்தி எடுத்துள்ளான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்தனர். அப்போது வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தாக தெரிவித்தார்.
இதனை சிசிடிவி காட்சி மூலம் உறுதிப்படுத்திய பொலிசார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணையில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் தாயார் சகாயராணி விக்டோரியா (42) குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது மணிகண்டன் சகாயராணியின் மகளை விட நன்றாக படிப்பதாகவும் தற்போது நடைபெற்ற தேர்வில் அவர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது.
மேலும் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் அவன் சிறப்பாக திறமை காட்டியுள்ளார். அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் தாயார் விஷம் கொடுத்தது தெரியவந்தது.
இந்த நிலையில் மாணவன் மணிகண்டன் நேற்று நள்ளிரவு அரசு மருத்துவமனையில் இறந்தார். இதனிடையே சகாயராணி விக்டோரியா (42) மீது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.