பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய சுரங்கப்பாதை: தப்ப முடியாமல் வாகனத்துடன் சிக்கிய பலர்
தொடர் கன மழையால் பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட மக்கள் மற்றும் வாகனங்களை மீட்க தென் கொரிய அதிகாரிகள் தரப்பு கடுமையாக போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக மூழ்கிய சுரங்கப்பாதை
தென் கொரியாவின் வடக்கு சுங்சியோங்-மாகாணத்தில் அமைந்துள்ளது சியோங்ஜு சுரங்கப்பாதை. சமீப நாட்களாக பெய்துவரும் கன மழையால், குறித்த சுரங்கப்பாதை மொத்தமாக மூழ்கியுள்ளது.
@reuters
இந்த நிலையில், எத்தனை பேர் வாகனங்களில் சிக்கியுள்ளனர் என்பது குறித்து தகவல் இல்லை. ஆனால் சுமார் 19 வாகனங்கள் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இதுவரை கன மழைக்கு 26 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 பேர் மாயமானதாகவும் கூறுகின்றனர். பெரும்பாலான இறப்புகள் மலைப்பாங்கான வடக்கு கியோங்சாங் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவுகளில் சிக்கி பல குடியிருப்புகள் மொத்தமாக சேதமடைந்துள்ளன. சனிக்கிழமை மட்டும் நாடு முழுவதும் சுமார் 300 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
@reuters
தென் கொரியாவை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 1,000 முதல் 1,800 மி.மீ வரையில் மழைப்பொழிவு இருக்கும். தற்போது பெய்து வரும் கன மழைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிகளும் பயணிகளும் தப்பிக்க முடியாமல்
உள்ளூர் நிர்வாகங்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ராணுவத்தை களமிறக்கவும் பிரதமர் Han Duck-soo உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, சியோங்ஜு சுரங்கப்பாதையில் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளம் புகுந்ததாகவும், சாரதிகளும் பயணிகளும் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 9 பேர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மரணமடைந்துள்ளதாக கூறுகின்றனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை, கோசன் அணை நிரம்பத் தொடங்கியதை அடுத்து, சுமார் 6,400 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
@reuters
வெள்ளிக்கிழமை பிற்பகல், நிலச்சரிவு காரணமாக வடக்கு சுங்சியோங்கில் ரயில் தடம் புரண்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |