பிளஸ் 2 பாட புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவு! வைரலாகும் புகைப்படம்
தமிழ்நாடு அரசின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
சனாதனம் பற்றிய விமர்சனம்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று பேசியிருந்தார்.
அவர் பேசிய இந்த கருத்து இந்தியா முழுவதும் கடும் விமர்சனத்தை பெற்றது. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் உதயநிதிக்கு எதிராக பேசினர். இருந்தாலும் உதயநிதி, சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை எனக் கூறினார்.
பாடப்புத்தகத்தில் சனாதனம்
இந்நிலையில், மோடி ஆதரவாளர் ஒருவர் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சனாதன கருத்துடைய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான அறவியலும் இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் பக்கம் 58-ல், "இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும்.
ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்" என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.
தற்போது இந்த பாட புத்தகத்தின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |