தண்ணீர் உரிமைப் பிரச்சினை: தாலிபான், ஈரான் இடையே கடும் துப்பாக்கிச்சூடு
தண்ணீர் உரிமைப் பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தான் எல்லையில் தாலிபான், ஈரான் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்துவருகிறது.
ஆப்கான்-ஈரான் இடையே பதற்றம்
தாலிபான் மற்றும் ஈரானியப் படைகள் சனிக்கிழமை (மே 27) ஆப்கானிஸ்தான் எல்லையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பலர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
தண்ணீர் உரிமைகள் தொடர்பான சர்ச்சையின் மத்தியில், இந்த மோதலால் காபூலுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவருகிறது.
AP
ஈரான் தரப்பு குற்றச்சாட்டு
ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தான் மாகாணமான நிம்ரோஸ் எல்லையில் தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரானின் துணை பொலிஸ் தலைவர் ஜெனரல் காசிம் ரெசாய் குற்றம் சாட்டினார். இதில் ஈரானின் இரண்டு எல்லைக் காவலர்கள் கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மோதல் காரணமாக ஆப்கானிஸ்தானுடனான ஒரு முக்கிய வர்த்தகப் பாதையான மிலாக் எல்லைக் கடக்கும் பகுதி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
AFP
இதனிடையே, ஈரானின் காவல் துறைத் தலைவர் ஜெனரல் அஹ்மத்ரேசா ரடான், ஈரானின் எல்லைப் படைகள் எந்தவொரு எல்லை அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமாக பதிலடி கொடுக்கும் என்றும், "ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிகாரிகள்" அவர்களின் அளவிடப்படாத மற்றும் சர்வதேச கொள்கைகளுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரான்தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியது- ஆப்கானிஸ்தான்
மறுபுறம் ஈரான்தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
சனிக்கிழமை நடந்த சண்டையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானைச் சேர்ந்த தலா ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகூர் கூறினார்.
AP
பிரச்சினை
ஹெல்மண்ட் நதிக்கான தெஹ்ரானின் நீர் உரிமைகளை மீற வேண்டாம் என்று ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இந்த மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானை எச்சரித்ததை அடுத்து சனிக்கிழமை இந்த சண்டை வந்துள்ளது.
நதி நீர் உரிமை சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியது.