வெளிநாட்டில் ஒட்டகம் மேய்க்க மறுத்த தமிழர் கொலை! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்.
ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டார் என அதிர்ச்சி தகவல்.
வெளிநாட்டில் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் தமிழர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தின் லெட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (40). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு நிதிஷ்குமார், ரிஷிகுமார் என இரு மகன்கள்.
சொந்தமாக காய்கறி கடை நடத்தி வந்த முத்துக்குமரன், போதிய வருமானம் இல்லாததால் வெளி நாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். இந்நிலையில் தனியார் ஏஜென்சி ஒன்று, குவைத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை உள்ளதாக கூறியதை நம்பி கடந்த 3ம் திகதி முத்துக்குமரன் குவைத் நாட்டுக்கு சென்றார்.
ஆனால், அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒட்டகம் மேய்க்க அவர் மறுத்துள்ளார்.இதனால் அதிருப்தியடைந்து, அவர் தாயகம் திரும்ப முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில், 7ம் திகதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, முத்துக்குமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குவைத் முதலாளி அவரை கொலை செய்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், முத்துக்குமரன் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும், தவறு செய்தவர்களை குவைத் அரசு தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையில் முத்துகுமரன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.