வெளிநாட்டில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த தமிழக விளையாட்டு வீரர்! கிறிஸ்துமஸ் தினத்தில் அதிர்ச்சி சம்பவம்
நேபாளத்தில் கைப்பந்து விளையாட சென்ற தமிழக வீரர், மைதானத்திலேயே ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக விளையாட்டு வீரர்
தமிழக மாவட்டம் திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஆகாஷ் (27). கைப்பந்து விளையாட்டு வீரரான இவர், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கைப்பந்து போட்டி ஒன்றில் கலந்துகொள்ள நேபாள நாட்டின் போக்ரா நகருக்கு ஆகாஷ் சென்றுள்ளார். அங்குள்ள ரங்கசாலா விளையாட்டு அரங்கில் கிறிஸ்துமஸ் தினத்தில் நடைபெற்ற போட்டியில் ஆகாஷ் கலந்துகொண்டு விளையாடினார்.
மர்ம மரணம்
அப்போது திடீரென ரத்த வாந்தி எடுத்த அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக விளையாட்டு வீரர்கள் உடனடியாக ஆகாஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஆகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆகாஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தங்கள் மகனின் இறப்பு செய்தி கேட்டு ஆகாஷின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து ஆகாஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆகாஷின் மரணம் கைவண்டூர் கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.