காவல்துறை, பாஜக வாக்குவாதம்; தமிழிசை சவுந்தரராஜன் கைது - என்ன காரணம்?
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்மொழி கொள்கை
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அவரின் இந்த பேச்சுக்கு பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடந்த போவதாக தமிழக பாஜக அண்ணாமலை அறிவித்தார்.
இதனையடுத்து, சென்னை அமைந்தகரையில் நேற்று(05.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் கைது
இந்நிலையில், இன்று (06.03.2025) சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை நடத்தினார் தமிழிசை சவுந்தரராஜன்.
அனுமதி பெறாமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் தெரிவித்ததால், காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
"நாங்கள் என்ன போராட்டமா நடத்துகிறோம். அமைதியான முறையில் தானே கையெழுத்து வாங்குகிறோம். கையெழுத்து வாங்கிவிட்டு தான் இங்கிருந்து கலைந்துசெல்வோம்" என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, காவல்துறையினர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட அங்கிருந்த பாஜகவினரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழிசை சௌந்தராஜன் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த பாஜக தொண்டர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |