புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் பணியில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் துவக்கிய பிரித்தானிய அதிகாரிகள்...
பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் துவக்கினர் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள்.
சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரித்தானியா எடுத்துக்கொண்ட முயற்சிகள்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் விடயம் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு பெரும் தலைவலியாக ஆன நிலையில், புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, சட்டவிரோத புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்த திட்டம் முதலான பல்வேறு நடவடிக்கைகளை பிரித்தானியா முயற்சித்துவருகிறது.
CREDIT: Jamie Lorriman
பிரான்சுடன் இணைந்து புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் திட்டம்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தவேண்டுமானால், அதற்கு பிரான்சின் ஒத்துழைப்பும் அவசியம் எந்தை உணர்ந்துகொண்ட பிரித்தானியா, புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு கொடுக்கும் தொகையை 63 மில்லியன் பவுண்டுகளாக உயர்த்தியது.
மேலும், பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேனுக்கும் பிரான்ஸ் உள்துறைச்செயலரான Gerald Darmaninக்கும் இடையில் தத்தம் நாடுகள் சார்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது அடுத்த கட்ட நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரான்ஸ் பொலிசாருடன் இணைந்து பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், பிரான்ஸ் எல்லையில் ரோந்து செல்லும் விடயத்தைத் துவக்கியுள்ளார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை துவங்குவதற்கு சற்று முன்பு இந்த நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.