எங்களை மன்னியுங்கள்! மாலத்தீவுக்கு இந்தியர்கள் வர வேண்டும்.., முன்னாள் அதிபர் வேண்டுகோள்
மாலத்தீவு மக்கள் மன்னிப்புக் கோர விரும்புகிறார்கள் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்சனை?
லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "லட்சத்தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதனால், இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதை புறக்கணித்து வருகின்றனர். இதனால், கடந்த மூன்று மாதங்களாக மாலத்தீவு சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இது மாலத்தீவின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.
மேலும், மாலத்தீவைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் ஆளும் கட்சியினர் சிலர் பிரதமர் மோடியின் பதிவை கேலி செய்யும் விதமாக பதிவிட்டிருந்தனர்.
இவர்களின் கருத்துக்கு தற்போதைய அதிபர் முகமது முய்சு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மன்னிப்புக் கோர விரும்புகிறோம்
மேலும், மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் இந்தியாவின் எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா வந்திருந்த முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "இந்தியர்களின் புறக்கணிப்பு மாலத்தீவை பெரிதளவில் பாதித்துள்ளது. நடந்த விடயத்திற்கு மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள். மீண்டும் இந்திய மக்கள் மாலத்தீவுக்கு சுற்றுலாவுக்காக வர வேண்டும். எங்கள் விருந்தோம்பலில் எந்த குறையும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |