என் வண்டியை கொடுங்க... - செல்போன் டவர் மீது ஏறி பொலிசாருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி!
தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்துக் கொள்வேன் என்று பொலிசாருக்கு மிரட்டல் விடுத்த குடிபோதை ஆசாமியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய நபர்
திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (30). இவர் ஒரு ஹொட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் செய்யாறு பகுதியில் தன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சாலையில் நின்றுக்கொண்டிருந்த பொலிசார் அவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர் நன்றாக மது அருந்தியது தெரியவந்தது.
குடிபோதையில் வண்டி ஓட்டியதற்காக பொலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வருகையில் கீழே விழுந்ததால் அவர் உடலில் காயம் இருந்தது.
இதனையடுத்து, பொலிசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது, மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்த அந்த போதை ஆசாமி, மருத்துவமனையிலிருந்து ஓடிச் சென்று அருகில் இருந்த கடை மீதுள்ள செல்போன் டவரில் ஏறினார்.
தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி
செல்போன் டவரில் ஏறிய அந்த ஆசாமி, என் வாகனத்தை கொடுக்கவில்லையென்றால் நான் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று பொலிசாருக்கு மிரட்டல் விடுத்தார். உடனே, பொலிசார் ராஜசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், ராஜசேகர் அதை ஏற்கமறுத்தார். உடனே, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். 3 தீயணைப்பு வீரர்கள் டவரின் பின்புறமாக கயிறு கட்டி மேலே ஏறினர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டு கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, பொலிசார் அவரை செய்யாறு காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் அப்பகுதியில் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |