அன்பார்ந்த பெண்களே தற்கொலை பிரச்சனைகளுக்கு முடிவல்ல! பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத வலி.. உயிரிழந்த தூரிகையின் பதிவு
தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் முடிவல்ல என பதிவிட்டிருந்த தூரிகை
நீங்கள் தற்கொலை செய்வதால் அணு அளவும் எதுவும் மாறிவிடப் போவதில்லை என தூரிகையின் விழிப்புணர்வு வாசகம்
கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலைக்கு எதிராக கருத்து பதிவிட்டது தெரிய வந்துள்ளது.
பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்முகத் தன்மை கொண்ட 28 வயது பெண்ணான தூரிகையின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அவரது இறப்புக்கு பின் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தூரிகையை அறிந்தவர்கள் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும், உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆண்டு தூரிகை சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு ஒன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வாக தூரிகை எழுதியிருந்தார்.
அவரது பதிவில், 'வாழ்க்கையில் எல்லா முடிவுகளுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஆனால் ஒன்றை முடித்துக் கொள்வது என்பது எஞ்சிய பயணத்தை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் முடிவல்ல. நீங்கள் தற்கொலை செய்வதால் அணு அளவும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. வாழ்க்கையை இழக்கிறோம். மகிழ்ச்சியை இழக்கிறோம். அனுபவங்களை இழக்கிறோம். இன்பத்தை இழக்கிறோம். சிரிப்பு இழக்கிறோம். வாழ்க்கையை முழுமையாக இழக்கிறோம்.
உங்களை அறிந்தவர்கள் உங்களுடைய இழப்பினால், ஓரிரு நாள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு தங்களுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். அதன் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் பெற்றோருக்கு அது ஈடு செய்ய முடியாத வலி. நீங்கள் உங்கள் நினைவுகளை மட்டுமே அவர்களுக்கு கொடுத்துவிட்டு, கடைசி வரை அவர்கள் தனிமையில் தவிக்க விட்டு செல்கிறீர்கள்.
சில நாட்கள் மட்டுமே உங்களுடன் பழகியவர்கள், ஐந்து அல்லது ஆறு வருடங்கள் வரை பழகியவர்கள் என யாராக இருந்தாலும், எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், வாழ்க்கையின் ஓட்டத்தில் உங்களை மறந்து விட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கையில் வாழத் தொடங்கி விடுவார்கள், அவர்களுக்கு பிடித்த மனிதர்கள் மற்றும் விஷயங்களுடன் வாழ்வார்கள், சிரிப்பார்கள், மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இழப்பு உங்களுக்குத்தான்.
உங்கள் வாழ்க்கையின் அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சி உள்ளிட்டவற்றை பார்க்காமலே சென்று விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய அழகு மற்றும் சிரிப்பை இழந்து விடுவீர்கள். உங்களையே இழந்து விடுவீர்கள். தற்கொலைக்கு பின்னால் இருக்கும் ஒரு சிறிய உண்மை என்னவென்றால் உங்களை மற்றவர்கள் மிஸ் பண்ணுகிறார்கள் என்பதை விட, நீங்கள்தான் உங்களுடைய சிரிப்பு மற்றும் பல வருட வாழ்க்கையின் தருணங்களை இழக்கிறீர்கள்.
எனது அன்பார்ந்த பெண்களே.. பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னும் வலிமையுடனும் துணிச்சலுடனும் இருக்க வேண்டும்.. இயல்புக்கு மாறான பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் சமநிலை இன்மை உள்ளிட்டவற்றை சந்திக்கும் போது இன்னும் வலிமையுடனும் துணிச்சலுடனும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் எதிர் கொள்ள வேண்டும், உங்கள் வாழ்க்கையை நேசியுங்கள். வலிமையுடன் இருங்கள் பெண்களே.. அதை அதிகப்படுத்துங்கள்' என கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்க்கும்போது தூரிகை எப்படி தற்கொலை முடிவை எடுத்திருப்பார் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.