அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் என்னென்ன? திடுக்கிட வைக்கும் மருத்துவ அறிக்கை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் தலை சுற்றல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை
இந்நிலையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வலதுபுற மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் முதுகெலும்பு பகுதிகளில் வீக்கம், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கால்சியம் படிவு ஆகிய பாதிப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பை கற்கள் இருப்பதால், நாளடைவில் அது உணவு உட்கொள்வதை குறைக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |