திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சி! தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
திருச்சி முகாமிலுள்ள இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியறிந்து தான் பதற்றமும், பெரும் மனவேதனையுமடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ள தங்களை விடுவிக்கக் கோரி, இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 15க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
தூக்க மாத்திரை மட்டுமின்றி, திக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் தனது வயிற்றுப் பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களை, உடனடியாக சிறைக்காவலர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் ட்விட்டரில் பதிவிட்டதாவது, சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, கொடுந்துயருக்கு ஆளான தங்களை விடுதலை செய்யக்கோரி 15 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த திருச்சி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியறிந்து பதற்றமும், பெரும் மனவேதனையுமடைந்தேன்.
தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களுக்கும், கொடும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படும் அவர்களது விடுதலை கோரிக்கையானது மிக நியாயமானது. ஆகவே, அவர்களின் தார்மீகக்கோரிக்கையை ஏற்று, சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். (2/2)
— சீமான் (@SeemanOfficial) August 18, 2021
தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களுக்கும், கொடும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படும் அவர்களது விடுதலை கோரிக்கையானது மிக நியாயமானது. ஆகவே, அவர்களின் தார்மீகக்கோரிக்கையை ஏற்று, சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.