பிரித்தானியா எடுத்த முடிவால் கடும் கோபத்தில் ட்ரம்ப்... முக்கிய ஒப்பந்தம் ஒன்று முடக்கப்படலாம்
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, ஸ்டார்மர் அரசாங்கத்தின் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை முடக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
பத்து நாட்கள் அவகாசம்
வெளியான தகவலின் அடிப்படையில், சர்வதேச சட்டத்தை மீறக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, டியாகோ கார்சியா அல்லது RAF ஃபேர்ஃபோர்டில் இருந்து எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளையும் நடத்துவதற்கு எதிராக கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்துள்ளார்.

ஸ்டார்மரின் இந்த அதிரடி முடிவுகளே, இந்தியப் பெருங்கடல் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் ஸ்டார்மரின் சர்ச்சைக்குரிய திட்டத்தின் மீது ட்ரம்பின் சமீபத்திய தாக்குதலைத் தூண்டியுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
முன்னதாக, ஈரான் அருகே மிகப் பெரிய போர்க்கப்பலை நிறுத்திய ட்ரம்ப், நேற்று ஈரானுக்கு அதன் அணுசக்தி திட்டம் குறித்து அமைதி ஒப்பந்தத்தை எட்ட பத்து நாட்கள் அவகாசம் அளித்து எச்சரித்தார், இல்லையெனில் மிக மோசமான சம்பவங்கள் நடக்கும் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் தமது கோபத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப், சர் கெய்ர் ஸ்டார்மர் இந்த முக்கியமான தீவின் கட்டுப்பாட்டை இழப்பதன் மூலம் ஒரு பெரிய தவறு செய்கிறார் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட மறுத்தால், குளோசெஸ்டர்ஷையரில் உள்ள டியாகோ கார்சியா மற்றும் RAF ஃபேர்ஃபோர்டில் இருந்து தாக்குதலை நடத்த தேவைப்படலாம்.
மட்டுமின்றி, ஈரான் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது, பிரித்தானியா உட்பட பல நாடுகளை ஈரானின் தாக்குதலில் இருந்து காப்பாற்றவே என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
கடந்த பல வாரங்களாக ட்ரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவித்து வருகிறது. இரண்டாவது மிகப்பெரிய விமானம் தாங்கும் கப்பலும் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஈரான் பதிலடி கொடுக்க முயன்றால் இஸ்ரேலைப் பாதுகாக்க விமானங்களை ஏவுவது உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. USS Abraham Lincoln போர்க்கப்பலானது தற்போது ஓமன் கடற்கரையிலிருந்து 200 மைல்கள் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ கவலைகள்
யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு, புதன்கிழமை மொராக்கோ கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள தளங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரைந்துள்ளன.

இதனிடையே, பிரித்தானியா துணைப் பிரதமர் டேவிட் லாமியின் சிறப்பு ஆலோசகரான பென் ஜூடா தெரிவிக்கையில், ஈரானுக்கு எதிராக பிரித்தானியப் பிரதேசத்தில் தளங்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வ கவலைகள் காரணமாக மறுக்கப்பட்டிருக்கலாம் என்றார்.
மட்டுமின்றி, சாகோஸ் தீவுகள் குறித்த ட்ரம்பின் மனமாற்றம், நீண்டகால ஒப்பந்தத்தைப் பற்றிய பிரதிபலிப்பாக இல்லாமல், டியாகோ கார்சியாவின் தற்போதைய பயன்பாடு பற்றியது என்பது உறுதியாகிறது எனவும் பென் ஜூடா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானில் அமெரிக்க இலக்கு என்பது அதன் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் இராணுவ நிறுவல்கள் ஆகியவையாக இருக்கலாம் என்று வெளியான தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ட்ரம்பின் முடிவுக்கு பிரித்தானியா தற்போது மறுப்பு தெரிவித்திருந்தாலும், பிரித்தானியாவின் முதன்மையான பாதுகாப்பு கூட்டாளியாக அமெரிக்காவே தொடர்ந்து உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |