மற்றொரு நாட்டில் ஆட்சியை கவிழ்க்கும் அமெரிக்கா? CIA க்கு அனுமதி வழங்கிய டிரம்ப்
வெனிசுலாவில் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ள CIAவிற்கு டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.
அமெரிக்கா வெனிசுலா மோதல்
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது.
வெனிசுலா அதிபர் மதுராவை போதைப்பொருள் பயங்கரவாதி என குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப் அரசு, அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு 50 மில்லியன் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.
வெனிசுலா கடல் எல்லை நோக்கி 3 ஏவுகணை எதிர்ப்பு போர் கப்பல்களை டிரம்ப் அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து, போதைப்பொருள் கடத்துவதாக கூறி, வெனிசுலா கப்பல்கள் மீது அமெரிக்கா கடற்படையின் போர் கப்பல்கள் தாக்குதல் நடத்தியது. இரு மாதங்களில், 5 முறை வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவிடம் எண்ணெய், எரிவாயு வாங்குவதை நிறுத்த வேண்டும்! ஜப்பானுக்கு அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப் அரசு
அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்க்கும் வகையில், நாட்டு மக்களை திரட்டி வருவதாக மதுரா அறிவித்தார்.
சிஐஏவிற்கு அங்கீகாரம் ஏன்?
இந்நிலையில், வெனிசுலாவில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சிஐஏவிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், தென் அமெரிக்க நாட்டில் நிலத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்று கூறப்படுபவர்களுக்கு எதிரான தாக்குதல்களை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
சிஐஏவை வெனிசுலாவிற்கு அனுப்ப அங்கீகாரம் அளித்தது ஏன் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "2 காரணங்களுக்காக அங்கீகாரம் அளித்தேன். ஒன்று வெனிசுலாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு போதைப்பொருட்களை அனுப்புகிறார்கள்.
மற்றொன்று, அவர்கள் நாட்டு சிறைகளை காலி செய்து எங்கள் நாட்டின் சிறைகளை நிரப்புகிறார்கள்" என தெரிவித்தார்.
நோபல் பரிசு பெற்றவரின் அழைப்பு
CIA மதுராவை அகற்ற உள்ளதாக என கேள்வி எழுப்பப்பட்ட போது, "அப்படி ஒரு கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால் வெனிசுலா வெப்பத்தை உணர்கிறது" என தெரிவித்தார்.
அதேவேளையில், 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, மதுரா உள்நாட்டு மக்கள் மீது தொடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தலையீடு தேவை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனேவே பல்வேறு நாடுகளின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னணியில் CIA உள்ளதாக சந்தேகிக்கப்படும் சூழலில், டிரம்ப்பின் இந்த அனுமதி, மச்சாடோவின் அழைப்பு ஆட்சி கவிழப்பிற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |