இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள் இனி விருந்துக்கு செல்லலாம்! டிரம்ப் பேச்சால் புதிய சர்ச்சை
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் மிகப்பெரிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் சுற்றுப்பயணம்
சவுதி அரேபியாவில் நடைபெற்ற சவுதி-அமெரிக்க முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் தனது நிர்வாகம் தலையிட்டு வெற்றி கண்டதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.
மத்தியஸ்தம் செய்தது அமெரிக்கா
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல், அணு ஆயுதப் போராக மாறும் அளவிற்கு தீவிரமடைந்ததாகவும், இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் இருந்ததாகவும் கருத்து தெரிவித்த ட்ரம்ப், மேலும், வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்தி, இரு நாட்டு தலைவர்களையும் சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
"அணு ஆயுதப் போரை தவிர்த்து, வர்த்தகத்தை மேற்கொள்வோம். நீங்கள் இருவரும் சக்தி வாய்ந்த மற்றும் சிறந்த தலைவர்கள்" என்று தான் கூறியதாகவும், இதன் விளைவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட பலர் இந்த சமாதான முயற்சியில் கடினமாக உழைத்ததாகவும், அவர்களின் பணிக்கு தான் கடமைப்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் இனி அமைதியாக ஒன்றாக உணவருந்துவார்கள் என்றும் டிரம்ப் கருத்து தெரிவித்து இருப்பது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மறுப்பு
ஆனால், டிரம்பின் இந்த கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்தவொரு போர் நிறுத்தத்திலும் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |