ஐரோப்பிய ஒன்றியம் 20%, பிரித்தானியா 10%..!அமெரிக்க இறக்குமதியில் அதிரடி வரி உயர்வு! முழு விவரம்
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரி வரம்பினை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
விடுதலை நாள்(Liberation Day) என்று அவர் பெயரிட்ட இந்த நாளில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் உலகளாவிய 10% அடிப்படை வரியை (Universal 10% "baseline" tariff) அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கை, சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மீது வரி விதிப்பு
இதன் படி, முக்கிய பொருளாதாரங்களுக்கான குறிப்பிட்ட வரி விகிதங்களையும் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
அதில், பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியையும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரியையும் டிரம்ப் விதித்து இருப்பதை பார்க்க முடிகிறது.
பரஸ்பர வரிகள் என்ற தலைப்பில் ஒரு பெரிய விளக்கப்படத்தை டிரம்ப் முன்வைத்தார்.
மற்ற நாடுகள் அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளையும், வாஷிங்டன் விதிக்கும் வரிகளையும் ஒப்பிட்டார்.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மீது குற்றச்சாட்டு
சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை டிரம்ப் தனிமைப்படுத்தி விமர்சித்தார், அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டியதுடன், இந்த நிலைமையை அவர் வருத்தமானது மற்றும் பரிதாபகரமானது என்று விவரித்தார்.
இந்தியாவுடனான வர்த்தக உறவுகளைப் பற்றி பேசுகையில், அவை "மிகவும் கடினமானவை. மிகவும், மிகவும் கடினமானவை" என்று அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் வெளியிட்ட பெரிய விளக்கப்படத்தை அடிப்படையாக கொண்டு, சீனாவுக்கு 34% வரியும், இந்தியாவுக்கு 26% வரியும் விதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கனடா, மெக்சிகோ மீது கடும் விமர்சனம்
அவரது உரையின் மையமாக, முக்கிய வர்த்தக பங்காளிகளான கனடா மற்றும் மெக்சிகோவை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அவர்களின் வர்த்தக நடைமுறைகள் "நியாயமற்றவை" என்று அவர் குற்றம் சாட்டினார்.
வர்த்தக பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் முன்னர் அச்சுறுத்தப்பட்ட 25% வரி உடனடியாக, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விவரங்கள்
டிரம்ப் வெளியிட்டுள்ள பட்டியலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் அதிக வரி விதிப்புக்கு உள்ளாகியுள்ளன. சில முக்கிய நாடுகளுக்கான வரி விவரங்கள் பின்வருமாறு:
- ஐரோப்பிய ஒன்றியம் - 20%
- கொசோவோ - 10%
- சுவிட்சர்லாந்து - 31%
- ஐக்கிய இராச்சியம் (United Kingdom) - 10%
- நார்வே - 15%
- உக்ரைன் - 10%
- லிச்சென்ஸ்டீன் - 37%
- செர்பியா - 37%
ஆசிய நாடுகளுக்கான வரி விவரங்கள்
ஆசிய நாடுகளுக்கும் டிரம்ப் அதிக வரி விதித்துள்ளார். சிங்கப்பூரின் குறைந்தபட்ச 10% வரி முதல் லாவோஸ் நாட்டின் அதிகபட்ச 48% வரி வரை இந்த பட்டியல் நீள்கிறது. ஆசிய நாடுகளில் சிலவற்றிற்கான வரி விவரங்கள் பின்வருமாறு:
- சீனா - 34%
- வியட்நாம் - 46%
- தைவான் - 32%
- ஜப்பான் - 24%
- இந்தியா - 26%
- தென் கொரியா - 25%
- தாய்லாந்து - 36%
- மலேசியா - 24%
- கம்போடியா - 49%
- பங்களாதேஷ் - 37%
- சிங்கப்பூர் - 10%
- பிலிப்பைன்ஸ் - 17%
- பாகிஸ்தான் - 29%
- இலங்கை - 44%
- மியான்மர் - 44%
- லாவோஸ் - 48%
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |