உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது - டிரம்ப் அறிவிப்பு
உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர்
உக்ரைன் நேட்டோ அமைப்பில் (NATO) இணைய ஆர்வம் காட்டி வந்தது. இதனை கடுமையாக எதிர்த்த ரஷ்யா அதிபர் புடின், நேட்டோவில் இணையும் முடிவை கைவிடாவிட்டால் உக்ரைன் மீது போர் தொடுப்போம் என கூறி தாக்குதலை தொடங்கினார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்த போர் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், ரஷ்யா அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி அலாஸ்காவில் சந்தித்து பேசினார்.
ஆனால், இந்த சந்திப்பில் எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேவேளையில், உக்ரைனின் டொனெட்ஸ்க்(donetsk) பிராந்தியத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
டிரம்ப் அறிவிப்பு
புடின் சந்திப்பையடுத்து, இன்று வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "ரஷ்யா உடனான போரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பினால் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரலாம். இல்லையென்றால் தொடர்ந்து சண்டையிடலாம்.
இந்த போர் எப்படி தொடங்கியது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா வழங்கிய Crimeaவை திரும்ப பெற முடியாது. உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது. சில விடயங்கள் ஒரு போதும் மாறாது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |