இந்த ஒரு காரணத்திற்காக எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள் - டிரம்ப் ஆதங்கம்
எனக்கு ஒரு போதும் நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என டிரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போர்
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அவரின் அறிவிப்பிற்கு பின்னர் இரு நாட்டு பிரதிநிதிகளும் முறைப்படி போர் நிறுத்தத்தை அறிவித்தன.
அதேவேளையில், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலே இந்த போரை நிறுத்தினோம். இதில் டிரம்ப்பின் தலையீடு எதுவும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. நான்தான் போரை நிறுதித்தேன் என டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
பாகிஸ்தான் பரிந்துரை
இந்நிலையில், அமெரிக்காவிற்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததற்கு டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அசிம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்தளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனக்கு 4-5 முறை நோபல் பரிசு தந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு கிடைக்காது என டிரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரவாண்டாவில் அமைதியை ஏற்படுத்தியதற்காகவே எனக்கு நோபல் பரிசை வழங்கி இருக்க வேண்டும். காங்கோவை பாருங்கள். அல்லது செர்பியா, கொசோவா போன்ற நாடுகளை கூட குறிப்பிடலாம்.
லிபரல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அணுசக்தி நாடுகளின் போரை நிறுத்தியுள்ளேன். ஏற்கனவே எனக்கு 4-5 முறை அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு தரமாட்டார்கள். காரணம் லிபரல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நோபல் பரிசை வழங்குவார்கள்" என கூறினார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சோசியல் பக்கத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல தசாப்தங்களாக நடந்து வரும் போருக்கு வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்பிரிக்காவிற்கும், வெளிப்படையாகச் சொன்னால், உலகிற்கும் ஒரு சிறந்த நாள்! இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது, செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணுவதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது, இது எல்லாம் சரியாக நடந்தால், கூடுதல் நாடுகள் கையெழுத்திடும். யுகங்களில் முதல் முறையாக மத்திய கிழக்கை ஒன்றிணைக்கும்.
ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது, அந்த விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, ஆனால் மக்களுக்குத் தெரியும், எனக்கு அவ்வளவுதான் முக்கியம்" என பதிவிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல், தனக்கும் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் டிரம்ப் இது குறித்து பேசி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |