கம்யூனிச பைத்தியக்காரன்; இந்திய வம்சாவளி வேட்பாளரை விமர்சித்த டிரம்ப்
நியூயார்க் மேயர் தேர்தல் இந்திய வம்சாவளி வேட்பாளரை, அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தல் வரும் நவம்பர் 4 ஆம் திகதி நடைபெற உள்ளது.
ஜோர்ஹான் மம்தானி
இதற்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வில் இந்திய வம்சாவளியான ஜோர்ஹான் மம்தானி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

மேயர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா உடன் மோத உள்ளார். இதில் மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மற்றும் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை பெறுவார்.
பாலஸ்தீனத்தனத்தை ஆதரிக்கும், கம்யூனிசவாதியான மம்தானி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்ப் விமர்சனம்

டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "இறுதியாக அது நடந்துவிட்டது, ஜனநாயகக் கட்சியினர் எல்லையை மீறி விட்டார்கள். 100% கம்யூனிஸ்ட் பைத்தியக்காரரான ஜோஹ்ரான் மம்தானி, டெம் பிரைமரியை வென்று மேயராகப் போகிறார்.
இதற்கு முன்பும் தீவிர இடதுசாரிகள் இருந்திருக்கிறார்கள், ஆனால் இது கொஞ்சம் அபத்தமாகி வருகிறது. அவர் பார்க்கவே பயங்கரமா இருக்கிறார், அவருடைய குரல் எரிச்சலூட்டுகிறது. அவருக்கு அவ்வளவு அறிவு இல்லை.
அவரின் பின்னால் AOC+3 இருக்கிறார்கள். எல்லாரும் முட்டாள்கள். நம்முடைய 'கிரேட் பாலஸ்தீன செனட்டர்' சக் ஷூமர் கூட அவருக்கு ஆதரவாகக் குழைந்து பேசுகிறார். ஆம், இது நம் நாட்டின் வரலாற்றில் பெரிய தருணம்" என தெரிவித்துள்ளார்.
யார் இவர்?
குஜராத் இஸ்லாமிய பூர்விகத்தை கொண்ட உகாண்டா கல்வியாளரான மஹ்மூத் மம்தானி மற்றும் பாலிவுட் இயக்குநர் மீரா நாயரின் மகன் தான் 33 வயதான ஜோர்ஹான் மம்தானி.

உகாண்டாவில் பிறந்த இவர், தனது 7வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும், 2021ல் நியூயார்க் மாகாண சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால், நியூயார்க் நகர வீட்டு வாடகை உயர்வை கட்டுப்படுத்துவேன் போன்ற இவரின் வாக்குறுதிகளால், இவருக்கு பெருமளவு ஆதரவு கிடைத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |