புடினுடன் அமெரிக்கா ஒப்பந்தம்... ஜெலென்ஸ்கியை கடுமையாக சாடிய ட்ரம்ப்
அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துவிட்டதாக கூறும் ட்ரம்ப், அதை ஒப்புக்கொள்ள ஜெலென்ஸ்கியை கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா வெளியேறும்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஒரு திருப்புமுனை இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இரண்டிற்கும் ஜேடி வான்ஸ் இறுதி எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ட்ரம்பின் கருத்து வெளிவந்துள்ளது.
அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அல்லது அமெரிக்கா வெளியேறும் என்றும் ஜேடி வான்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
புதனன்று ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யா இந்த விவகாரத்தில் எதற்கும் தயாராக இருப்பதாக நினைக்கிறேன், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது, ஜெலென்ஸ்கியுடன் ஒப்பந்தம் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ஒப்பந்தங்களுக்கு உடன்படும் என்றே தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தாம் ஜனாதிபதியாக இருக்கும் போது போருக்கு வாய்ப்பே இல்லை என்றார். ஆனால், உக்ரைன் பகுதியை ரஷ்யாவிற்கு தாரைவார்ப்பதை ஜெலென்ஸ்கி மறுத்து வருவதை ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
முழு நாட்டையும் இழக்காமல்
அத்துடன் ஜெலென்ஸ்கி பெருமை பேசுவதையும் நிறுத்த வேண்டும் என்றார். கிரிமியாவை தாரைவார்க்க மறுத்தால் போரை நீட்டித்து உக்ரைனை சரிவை நோக்கித் தள்ளும் அபாயங்கள் இருப்பதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமைதியை நாடினால், முழு நாட்டையும் இழக்காமல் தப்பிக்கலாம் என்றும் ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கினார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிமியாவை ரஷ்யா கைப்பறிய போது ஏன் உக்ரைன் போராடவில்லை என்றும் ட்ரம்ப் கேள்வி எழுப்பினார்.
கிரிமியாவை தாரைவார்க்க முடியாது என்ற ஜெலென்ஸ்கியின் பிடிவாதம் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் சிக்கலாக முடியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |