இந்தியா மீதான வரிகள்... புடினை சந்தித்த பிறகு ட்ரம்ப் சொன்னது என்ன?
ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது இரண்டு முதல் மூன்று வாரங்களில் பழிவாங்கும் வரிகளை விதிக்க வேண்டியிருக்கும் என்றும், ஆனால் தற்போது அதன் தேவை இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வரி விதிப்பதன் தேவை
அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உக்ரைன் போர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. போர் நிறுத்தம் உட்பட எந்த முடிவையும் இரு தலைவர்களும் முன்னெடுக்கவில்லை.
ஆனால் பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடந்தது என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்லார். இருப்பினும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பு குறித்து தகவல் எதையும் வெளியிட ட்ரம்பும் புடினும் மறுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடும் மீது வரி விதிப்பதன் தேவை இனி இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் புடினுக்கு சாதகமான முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார் என்றே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான எண்ணெய் வர்த்தகம் மற்றும் சீனா மீதான சாத்தியமான வரிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் இதை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா இழந்துவிட்டது
ஆனால், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக நாடுகள் மீது பழிவாங்கும் வரிகள் அல்லது கூடுதல் வரிகள் பற்றிப் பேசுகிறாரா என்பதை ட்ரம்ப் குறிப்பிடாமல், வழக்கமான குழப்பும் பதிலையே தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ரஷ்யாவிற்கு 50 நாட்கள் அவகாசம் அளித்து, ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்திய நிலையில், புடினுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிப்பதாக ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
ஆனால் அலாஸ்காவில் புடினுடனான சந்திப்புக்கு முன்னர், இந்தியா போன்ற ஒரு எண்ணெய் வாடிக்கையாளரை ரஷ்யா இழந்துவிட்டது, தாம் இரண்டாம் நிலை தடைகளை விதித்தால், அது ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அதற்கான வாய்ப்பு இனி இருக்காது என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |