அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்... எஃகு மற்றும் அலுமினியம் மீது வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்துவரும் டொனால்டு ட்ரம்ப், வெளிநாட்டு எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவிகித வரி விதிப்பதாக திங்களன்று அறிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு இந்த வரி விதிப்பு முடிவு கட்டும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும்,
நமது எஃகு மற்றும் அலுமினியத் தொழில்களை முதுகெலும்பாகப் பாதுகாக்கவும், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு இது தேவையான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது வெறும் வர்த்தகம் பற்றியது மட்டுமல்ல. எஃகு மற்றும் அலுமினியம் போன்ற முக்கியமான தொழில்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் வெளிநாட்டு உற்பத்திகளை நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வது பற்றியது என்றார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பதால், அது அமெரிக்க மக்களுக்கு பயன்படும் என ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மேலும், அடுத்த இரண்டு நாட்களில் மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் திட்டங்களை அறிவிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் கார்கள், semiconductor chips மற்றும் மருந்துகள் மீதான வரிகளையும் பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா முன்னெடுப்பதில்லை
இந்த வரி விதிப்புகளுக்கு மற்ற நாடுகள் பதில் வரி விதிப்பது தொடர்பில் தமக்கு கவலை இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் எஃகில் கால் பகுதி வெளிநாடுகளிலிருந்தே வருகிறது, கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் முதன்மையான ஏற்றுமதியாளர்களாக உள்ளனர்.
தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் ஏற்றுமதியில் முன்வரிசையில் உள்ளன. ட்ரம்பின் முதல் ஆட்சியின் போது சீனா 25 சதவிகிதம் எஃகு வரியால் பாதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவுக்கு அதிக அளவு எஃகு ஏற்றுமதியை சீனா முன்னெடுப்பதில்லை. ஆனால் உலக நாடுகளுக்கு பெருமளவு எஃகு ஏற்றுமதியை சீனா முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |