டொனால்டு ட்ரம்பின் துணை ஜனாதிபதி தெரிவு... ஐரோப்பாவுக்கும் உக்ரைனுக்கும் காத்திருக்கும் பேரிடி
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் தமது துணை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ள நபர் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவதில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களில் முதன்மையானவர் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்காவை நம்பியிருப்பதை
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கண்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்காவை நம்பியிருப்பதை கைவிட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் என்பதும் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் செனட்டர் ஜே.டி.வான்ஸ் இந்த இரு விவகாரங்கள் தொடர்பில் வெளிப்படையாகவே தமது கருத்தை முன்வைத்துள்ளார். அப்போதே ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள் தரப்பு இது தொடர்பில் விவாதித்துள்ளனர்.
ஆனால் தற்போது அதே நபரை டொனால்டு ட்ரம்ப் தமது துணை ஜனாதிபதி பொறுப்புக்கு தெரிவு செய்துள்ளார் என்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் கிரீன் கட்சி தலைவர் ஒருவர் குறிப்பிடுகையில், துணை ஜனாதிபதியாக செனட்டர் ஜே.டி.வான்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது ஐரோப்பாவிற்கு சிக்கலாக முடியும் என்றார்.
டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்தால், உடனடியாக அவர் உக்ரைனுக்காக உதவிகள் அனைத்தையும் ரத்து செய்வார் அல்லது தடை செய்வார். மட்டுமின்றி போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அவர் கட்டாயப்படுத்துவார்.
இதனால் உக்ரைனின் கணிசமான பகுதி ரஷ்யாவுக்கு கையளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மட்டுமின்றி, இதன் விளைவாக மேலதிக இராணுவ நடவடிக்கைகளை தொடர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தைரியப்படுவார் என்றும் கிரீன் கட்சி தலைவர் எச்சரித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்பின் நட்பு வட்டாரத்தில் உள்ள ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கடந்த வாரம் ட்ரம்பை சந்தித்ததன் பின்னர் ஐரோப்பிய தலைவர்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில்,
நவம்பரில் ட்ரம்ப் ஜனாதிபதி பொறுப்புக்கு வந்த பின்னர், தமது முதல் கடமையாக ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதுடன், தாமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கவும் தயார் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபரல்ல
தற்போது செனட்டர் ஜே.டி.வான்ஸ் துணை ஜனாதிபதி பொறுப்புக்கு தெரிவாகியுள்ளதால், உக்ரைனை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் பணிகளை இருவரும் துரிதமாக செய்து முடிப்பார்கள் என்றே ஜேர்மனியின் கிரீன் கட்சி தலைவர் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் நடந்த முனிச் மாநாட்டில் பேசிய செனட்டர் ஜே.டி.வான்ஸ், ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபரல்ல விளாடிமிர் புடின், மற்றும் உக்ரைனில் ரஷ்யாவை தோற்கடிக்க அமெரிக்காவும் ஐரோப்பியாவும் போதுமான ஆயுதங்களை வழங்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கருத்து நேரெதிராக இருந்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன்,
தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக விளாடிமிர் புடின் இருப்பதற்கான எந்த அறிகுறியையும் தாங்கள் காணவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். மட்டுமின்றி ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்ட உக்ரைனுக்காக அமெரிக்க நிதியுதவி பிரேரணக்கு எதிராக வாக்களித்தவர் செனட்டர் ஜே.டி.வான்ஸ்.
மட்டுமின்றி, ரஷ்ய ஆதரவு கருத்துகளையே அவர் பதிலுக்கு முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |