துருக்கியின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய எர்டோகன்: 11வது முறையாக தேர்தலில் வெற்றி
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் (Recep Tayyip Erdogan) மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றியுள்ளார்.
தேர்தலில் எர்டோகன் வெற்றி
மே 14 அன்று நடந்த முதல் சுற்றில் முழுமையான வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதால், மீண்டும் முன்னெடுக்கப்பட்ட மறு தேர்தலில் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@bbc
97 சதவீத வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.1 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட Kemal Kilicdaroglu இதுவரை 47.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ முதன்மை தேர்தல் கவுன்சில் இன்னும் முடிவுகளை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், திரண்டிருந்த தமது ஆதரவாளர்கள் மத்தியில், தமது பரப்புரை வாகனத்தின் மீதேறி நின்று, தமது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு துருக்கியை ஆளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த தேர்தல் வெற்றியின் மூலமாக 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் எர்டோகன், இன்னொரு 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை தொடர்வார் என்றே முடிவாகியுள்ளது.
@bbc
பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பான வெற்றி
மேலும், எதிர்வரும் அக்டோபரில் குடியரசு ஸ்தாபன நூற்றாண்டு விழாவினை முன்னெடுப்பார் என்றே கூறப்படுகிறது. மே 14ம் திகதி நடத்தப்பட்ட முதல் சுற்றில், எர்டோகன் 49.52 சதவீத வாக்குகளை கைப்பற்றியதுடன், அவரை எதிர்த்து போட்டியிட்ட Kemal Kilicdaroglu அப்போது 44.88 சதவீத வாக்குகளை பெற்றார்.
மட்டுமின்றி, மே 14ம் திகதி நடந்த தேர்தலில் எர்டோகனின் AK கட்சி மொத்தமுள்ள 600 ஆசனங்களில் 323 ஐ கைப்பற்றியிருந்தது. மேலும், 50,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட, பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எர்டோகன் முதல் சுற்றில் எதிர்பார்த்ததை விட சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
@reuters
பிப்ரவரியில் ஏற்பட்ட பேரழிவு சம்பவத்தில் எர்டோகன் அரசாங்கம் மெத்தனமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் இதன்மூலம் பொய்யாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் எர்டோகனை பதவியில் இருந்து நீக்க 6 கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி அமைத்து Kemal Kilicdaroglu தலைமையில் தேர்தலை எதிர்கொண்டும், மக்கள் மீண்டும் எர்டோகனையே தெரிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.