விஜய் வீட்டை விட்டு வெளியே வராதது ஏன்? நீதிமன்றத்தில் விளக்கமளித்த தவெக
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தவெக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதிகளின் பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறை மற்றும் தவெக தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை வைத்தனர்.
ஒரு நபர் குழுவின் அறிக்கை வருவதற்கு முன்னர் யாரையம் கைது செய்ய கூடாது. விஜய் பரப்புரைக்கு தானாக வந்த கூட்டம் அது. நாங்கள் வண்டி வைத்து அழைத்து வரவில்லை. 1.20 லட்சம் சதுர அடி கொண்ட லைட் அவுஸ் பகுதியில் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அங்கு 60,000 பேர் கூடியிருக்க முடியும் என தவெக தரப்பில் தெரிவித்தனர்.
லைட் அவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பு அதிமுக பிரச்சாரம் நடந்தது. இதனால், அந்த இடத்தை விஜய் பிரச்சாரத்துக்கு வழங்கினோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீங்கள் ஏன் மைதானம் போன்ற இடத்தை கேட்கவில்லை என நீதிபதிகள் தவெகவிடம் கேள்வி எழுப்பினர்.
விஜய் டாப் ஸ்டார்
இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் வருவார்கள் என காவலர்களிடம் கூறினோம் என தவெக தரப்பில் தெரிவித்தனர்.
விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம் என தவெக வழக்கறிங்கள் பதிலளித்தார்.
உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார். வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் எப்படி குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என்று கணித்தீர்கள்.
பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10,000 என்று கணித்ததே தவறு. தவெக கேட்ட 3 இடமுமே போதுமானது இல்லை. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ராங் ரூட்டில் சென்ற விஜய்
கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை. காவல்துறை கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றார்கள். புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோயில் சந்திப்பில் தாமதம் செய்தனர்.
முனியப்பன் கோயில் சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார். கேரவனுக்குள் செல்லாமல் விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும்.
கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தாமதப்படுத்தியது தான் நெரிசலுக்கு காரணம். கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம்.
இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார். 2 ஆம்புலன்ஸ் வந்த போதும் விஜய் பேசிக்கொண்டிருந்தார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டை விட்டு வராதது
கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம், ஆனால் பொதுமக்களை தடுக்க வேண்டியது காவல்துறைதான். சாலை நடுவே இருந்தே தடுப்பை எடுத்திருந்தால் பரப்புரைக்கு சுலபமாக இருந்திருக்கும் என தவெக தரப்பில் பதில் அளித்தனர்.
மேலும், எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்று எங்களுக்குத்தான் அதிக வருத்தம். இதனால்தான் தவெக தலைவர் விஜய் வெளியே வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |