கட்சி தலைவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது - கரூர் உயிரிழப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின்
கரூர் உயிரிழப்பு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனது துபாய் பயணத்தை ரத்து செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கரூர் வந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நேற்று மாலை கரூரில் நடந்த சம்பவம் மிக மிக துயரமான சம்பவம். இந்த மாதிரியான சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அரசு முழு பாதுகாப்பு வழங்கியும், இப்படியொரு கோர விபத்து நடந்திருக்கிறது. பலரை இழந்திருக்கிறோம்.
முதலமைச்சர் இந்த செய்தியைக் கேள்விபட்டதும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை, பக்கத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்து அமைச்சர்களையும் உடனடியாக இங்கே வர வைத்தார்.
30 பேரின் உடல் பிரேத பரிசோதனை முடித்து உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 9 பேருக்கு பிரேத பரிசோதனை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் 2 மணிநேரத்தில் அவர்களின் உடலும் ஒப்படைக்கப்படும்.
தலைவர்களின் பொறுப்பு
ஐசியூவில் சிகிச்சை பெறுபவர்களிடமும் பேசியிருக்கிறேன். இங்கு இருக்கும் ஒவ்வொரு மருத்துவரிடமும் தனித்தனியே சந்தித்து சிகிச்சை சம்பந்தமாக கேட்டறிந்திருக்கிறேன். மொத்தம் 345 மருத்துவர்கள் தற்போது பணியில் இருக்கின்றனர்.
மதியம் 1 மணியளவில் நீதியரசர் அருணா ஜெகதீசன் இங்கு வர உள்ளார். விபத்து நடந்த இடத்திற்கும் சென்று ஆய்வு நடத்த உள்ளார். அவர் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.
இங்கு யாரையும் நான் குற்றம்சாட்டவோ அரசியல் பேசவோ விரும்பவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி தெளிவுப்படுத்தியுள்ளார். மக்களை சந்திப்பது அனைத்து தலைவர்களுக்கும் உள்ள உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது.
அதேவேளையில், தொண்டர்களை கட்டுப்படுத்துவது கட்சி தலைவர்களின் பொறுப்பு. சரியான நேரத்துக்கு வர வேண்டும் என பல விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு கூட்டத்தையும் எவ்வளவு தாமதம் செய்தார்கள் என்பது தெரியும். இனிமேல் அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |