லண்டன் மீதும் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல் நடக்கலாம்... எச்சரிக்கும் ஐ.நாவுக்கான உக்ரைன் தூதர்
உக்ரைனை ஆதரிக்க ஐரோப்பா தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், லண்டன் மீதும் ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என உக்ரைன் தூதர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுடனான நெருக்கடி
ஐ.நா.வில் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்த்திய ஆண்ட்ரி மெல்னிக், ரஷ்யா வேண்டுமென்றே நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டினார்.
போலந்து வான்பரப்பில் டசின் ட்ரோன்கள் ஊடுருவியதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், போலந்தும் அதன் நேச நாடுகளும் அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தின.
இந்த நிலையில், ரஷ்யாவுடனான நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நேட்டோ நாடுகள் போலந்தின் கிழக்குப் பகுதிக்கு அதிக துருப்புக்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளன.
உக்ரைன் நேட்டோ உறுப்பு நாடல்ல என்ற போதும், பிரித்தானியா உட்பட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகிறது. ஆனால், ரஷ்ய அச்சுறுத்தலை மேற்கத்திய நாடுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே மெல்னிக் கோரிக்கை வைத்துள்ளார்.
மட்டுமின்றி, உலகம் மூன்றாம் உலகப் போரின் படுகுழியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைதிப்பேச்சுவார்த்தைகள் இதுவரை எவ்வித பயனையும் தரவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், போலந்து மீது வேண்டுமென்றே ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டினார்.
களமிறங்க வேண்டும்
ஆனால், நேட்டோவின் உறுப்பு நாடாக, போலந்து பிரிவு 5 ஒப்பந்தத்தால் பாதுகாக்கப்படுகிறது. அதாவது உறுப்பு நாடு ஒன்றின் மீதான தாக்குதல், அனைத்து நாடுகளாலும் பதிலளிக்கப்படும் என்பதே பிரிவு 5 ஒப்பந்தம்.
நேட்டோ உறுப்பு நாடொன்றை ரஷ்யா தாக்கினால், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் பதில் தாக்குதலுக்கு களமிறங்க வேண்டும். இந்த நிலையில், போருக்கு செல்லாமல், உறுப்பு நாடுகள் சேர்ந்து முடிவெடுக்க போலந்து வலியுறுத்தியது.
ஆனால் இந்தத் தாக்குதல் பதிலளிக்கப்படாவிட்டால், புடினின் போர் வெறி போலந்தையும் தாண்டிச் செல்லும் என்று மெல்னிக் எச்சரிக்கை விடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |