உலக அமைப்புகளில் இருந்து வெளியேறும் ரஷ்யா: புடின் எடுத்துள்ள அதிரடி முடிவு!
மேற்கத்திய நாடுகளில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தி கொள்ளும் விதமாக உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற புடின் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் 84வது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலை எதிர்த்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல சேவை நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளிய நிலையில், இந்த வெளியேற்றங்கள் ரஷ்யாவிற்கு கூடுதல் நெருக்கடியாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் சார்பு நிலையில் உள்ள அமைப்புகள் மற்றும் ரஷ்யாவிற்கு பயன்தராத அமைப்புகளில் இருந்து வெளியேறும் முக்கிய முடிவை ரஷ்ய ஜனாதிபதி புடின் எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தங்களது நாடாளுமன்றத்திற்கு பட்டியல் ஒன்றை அளித்து இருப்பதாகவும், அவற்றில் இருந்து ரஷ்யாவிற்கு எதிரான மற்றும் பயன்தராத அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும் ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பியோட்டர் டால்ஸ்டாய் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய செய்தி நி்றுவனம் வெளியிட்ட தகவலில், வெளியுறவு அமைச்சகம் அளித்த பட்டியலில், உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பும் இடம்பெற்று இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனிய சுகாதார வசதிகள் மற்றும் பொது சுகாதாரத்தின் மீது ரஷ்ய படைகள் போரின் தாக்கத்தை கண்டிக்கும் விதமாக கடந்த வாரம் ரஷ்யாவிற்கு எதிராக முன்மொழியபட்ட தீர்மானத்திற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக வாக்களித்தது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரான்ஸை பழிக்கு பழி தீர்த்த ரஷ்யா: ராஜதந்திரிகளை வெளியேற்றி அதிரடி!
மேலும் அதே தீர்மானத்தில் உலக சுகாதார அமைப்பு தலைவர், ரஷ்யாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தை வெளியேற்றி வேறு நாட்டிற்கு மாற்றுவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.