உக்ரைன் தானிய கிடங்குகளை திட்டமிட்டு அழிக்கும் ரஷ்யா: கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து திடீரென்று ரஷ்யா விலகிய பின்னர், உக்ரைனின் தானிய கிடங்குகள் மீது தொடர் ட்ரோன் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
அமெரிக்கா கடும் கண்டனம்
புதன்கிழமை அவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
@getty
அத்துடன் உக்ரேனிய தானிய ஏற்றுமதியை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அடையாளம் காண நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உடனடியாக உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இணைய ரஷ்யா முன்வர வேண்டும் எனவும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 17ம் திகதி உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், தொடர்ந்து தானிய கிடங்குகள் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க வெளிவிவகார அலுவலக துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் தெரிவிக்கையில், உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திற்குத் திரும்ப விரும்புவதாக ரஷ்யர்களிடம் எந்த அறிகுறியையும் தாங்கள் காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
புடின் கவலைப்படுவதாக தெரியவில்லை
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பிறகு பாதிப்புக்கு உள்ளான உணவு நெருக்கடியை சமாளிக்க, அந்த ஒப்பந்தம் பேருதவியாக இருந்தது.
@getty
இதனிடையே, புதன்கிழமை ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலில் டேனூப் நதி அருகாமையில் உள்ள ரெனி பகுதியில் தானிய கிடங்குகள் பல சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் உணவு நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கவலைப்படுவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார் வேதாந்த் பட்டேல். மேலும், ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் உணவு பற்றாக்குறையை அதிகரிக்க செய்யும் என்றே பட்டேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |