உக்ரைன் படைகள் சரணைந்தால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்... ரஷ்யா மிரட்டல்
போக்ரோவ்ஸ்க் மற்றும் குபியன்ஸ்க் ஆகிய நகரங்களில் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரேனிய படைகள் சரணடைந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
கடும் முயற்சி
டொனெட்ஸ்க் நகருக்கான நுழைவாயில் என அறியப்படும் போக்ரோவ்ஸ்க் நகரை கைப்பற்ற கடந்த 2024ல் இருந்தே ரஷ்யா கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

டான்பாஸ் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இது நடந்து வருகிறது. இப்பகுதியில் உக்ரேனியப் படைகள் இன்னும் சுமார் 10% அல்லது 5,000 சதுர கி.மீ பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வேறு நகரங்கள் மீது கவனம் செலுத்தி வந்த ரஷ்ய படைகள் தற்போது போக்ரோவ்ஸ்க் மற்றும் குபியன்ஸ்க் நகரங்கள் இரண்டிலும் உக்ரேனியப் படைகளை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துள்ளது.
உக்ரைன் படைகள் வெளியேறுவது அசாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யப் படைகள் போக்ரோவ்ஸ்கை முழுமையாகச் சுற்றி வளைப்பதில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.

டான்பாஸ் முழுவதையும்
மேலும் குபியன்ஸ்கின் குறிப்பிடத்தக்க பகுதியைக் கட்டுப்படுத்தி, நகரத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் முன்னேறி வருகின்றன. இந்த நிலையில், உக்ரேனிய படைகள் தாமாக முன்வந்து சரணடைவதைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை என்றே ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மிரட்டல் விடுத்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகக் கொடிய போரில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக செல்வம் கொழிக்கும் டான்பாஸ் முழுவதையும் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருகிறது.
மட்டுமின்றி, கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மற்றும் டினிபோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் முன்னேறி வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனின் 19% க்கும் அதிகமான பகுதியை தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ரஷ்ய இராணுவம் கூறுகிறது.
இந்த ஆண்டு இதுவரை 3,400 சதுர கி.மீ.க்கும் அதிகமான உக்ரைன் பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |