இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையில் லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்கள் - ஐநா அதிர்ச்சி தகவல்
காசா மீதான இஸ்ரேல் போரில் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாக ஐநாவின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
கடந்த 2023 ஆம் ஆண்டு, காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு, 252 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.
இதன் காரணமாக, ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில், இதுவரை 60,000 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸை முற்றிலும் அழித்து, காசாவை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் காரணமாக, காசாவில் உணவுபஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிவாரண பொருட்களை உள்ளே அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதோடு, உணவுக்காக வரிசையில் காத்திருப்பவர்களை சுட்டுக்கொன்றுள்ளது.
லாபம் ஈட்டும் நிறுவனங்கள்
இந்நிலையில், 'ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை' என்ற தலைப்பிலான அறிக்கையை மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதால் இந்த போர் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 21 மாதப் போரில் டெல் அவிவ் பங்குச் சந்தை குறைந்தது 200 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், சந்தை லாபத்தில் 220 பில்லியன் டொலருக்கும் அதிகமாகக் குவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்த லியோனார்டோ எஸ்.பி.ஏ என்ற நிறுவனம் இஸ்ரேல் இராணுவத் துறையில் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. மேலும், ஜப்பானின் FANUC கார்ப்பரேஷன் ஆயுத உற்பத்திக்கான ரோபோ இயந்திரங்களை வழங்குகிறது.
Companies supporting Israel's occupation and genocide in PALESTINE - UN Special Rapporteur, Francesca P. Albanese. pic.twitter.com/3iAu9QBViL
— Azam Khan (@azamkhannz) July 4, 2025
தொழில்நுட்ப நிறுவனங்கள் மைக்ரோசாப்ட், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு அவர்களின் கிளவுட் மற்றும் AI தொழில்நுட்பங்களுக்கான அரசாங்க அளவிலான அணுகலை வழங்கி, அதன் தரவு செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துகின்றன.
இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், பாலஸ்தீனியர்களின் பயோமெட்ரிக் தரவைச் சேமிக்கும் மைய தரவுத்தளத்தை நிர்வகிப்பதற்கும் IBM நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.
போர்க்களத்தில் தானியங்கி முடிவெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் தானியங்கி முன்கணிப்பு காவல் தொழில்நுட்பத்தை, அமெரிக்க மென்பொருள் நிறுவனமான பலந்திர் டெக்னாலஜிஸ் போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது.
மேற்குக் கரையில் வீடுகளை இடிப்பதற்கும் சட்டவிரோத குடியிருப்புகளை உருவாக்குவதற்கும் கனரக இயந்திரங்களை வழங்கும் கேட்டர்பில்லர், ராடா எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ், தென் கொரியாவின் HD ஹூண்டாய் மற்றும் ஸ்வீடனின் வோல்வோ குழுமம் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பின்னணியில் முக்கிய முதலீட்டாளர்களாக அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களான பிளாக்ராக் மற்றும் வான்கார்டு ஆகியவை உள்ளதாக இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |