ஐரோப்பாவுக்கு படகில் பயணித்த 73 புலம்பெயர்ந்தோர் பலி? ஐநா வெளியிட்ட அறிவிப்பு
லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு படகில் பயணித்த 73 புலம்பெயர்ந்தோர் விபத்தில் உயிரிழந்ததாக ஐ.நா தெரிவித்துள்ளது.
படகில் பயணித்த புலம்பெயர்ந்தோர்
சுமார் 80 புலம்பெயர்ந்தோருடன் படகு ஒன்று லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இருந்து ஐரோப்பாவுக்கு கிளம்பியது. ஐரோப்பிய கரையை நோக்கி அந்த படகு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராமல் கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் 73 பேர் இறந்திருக்கலாம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட சடலங்கள்
ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட சமீபத்திய சோகம் இது என்றும், லிபியா அதிகாரிகள் 11 சடலங்களை மீட்டுள்ளதாகவும், புலம்பெயர்வுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தில் இருந்து தப்பிய 7 பேர் லிபிய கரையை அடைந்ததாகவும், மோசமான நிலையில் இருந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஐ.நா கூறியுள்ளது.