48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் - காசாவின் நிலை குறித்து ஐ.நா கவலை
காசாவில், 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே, பல தசாப்தங்களாக பிரச்சினை நீடித்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு, 252 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதன் காரணமாக, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் தொடுத்தது. இந்த போரில், இதுவரை 53,000 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, இஸ்ரேல் ராணுவம் காசா மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம். காசாவை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த 11 வாரங்களாக, பிறநாடுகளில் இருந்து வரும் உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை காசாவிற்குள் அனுப்ப இஸ்ரேல் மறுத்து வருகிறது.
தற்போது, பிரான்ஸ், கனடா, பிரித்தானிய போன்ற நாடுகளின் அழுத்தத்தால், 5 லொரிகளை மட்டும் உள்ளே அனுப்பியுள்ளது.
ஐ.நா கவலை
இந்த நிலை தொடர்ந்தால், உணவு கிடைக்காமல் அடுத்த 48 மணி நேரங்களில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர், ”இஸ்ரேல் பல வாரங்களுக்குப் பிறகு, காஸாவில் குழந்தைகளுக்கான உணவு உட்பட உதவிகளை வழங்கும் 5 லொரிகளை மட்டுமே அனுமதித்துள்ளது, கடலில் ஒரு துளி போன்றது.
அந்த 5 லொரிகளும் இன்னும் உதவி தேவைப்படும் மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. இப்படியே உதவி கிடைக்காமல் போனால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இப்போது தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத தாய்மார்களுக்கு அந்தக் குழந்தை உணவை வழங்க நாங்கள் எல்லா வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், காசாவிற்கு வழங்கப்பட்டு வரும் உதவியை இஸ்ரேல் தடுத்ததை கண்டித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |