தலிபான் தலைவர்கள் மீதான வெகுமதி ரத்து: அமெரிக்காவுடனான உறவில் புதிய திருப்பம்!
ஹக்கானி வலையமைப்பு தலைவர்கள் மீதான வெகுமதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
வெகுமதியை ரத்து செய்த அமெரிக்கா
ஆப்கானிஸ்தானின் முக்கிய தீவிரவாத குழுவான ஹக்கானி வலையமைப்பின் முன்னணி உறுப்பினர்களைக் கைது செய்ய அமெரிக்கா அறிவித்திருந்த பல மில்லியன் டொலர் வெகுமதியை ரத்து செய்துள்ளது.
குறிப்பாக, தாலிபான் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி மீதான வெகுமதியும் இதில் அடங்கும் என தெரியவந்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில், அமெரிக்க மற்றும் இந்திய தூதரகங்கள் மற்றும் நேட்டோ படைகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்திய ஹக்கானி வலையமைப்பின் வரலாற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
2021 இல் சர்வதேச படைகள் வெளியேறியதில் இருந்து ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான் அரசாங்கத்தில் ஹக்கானி வலையமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை
டிரம்ப் நிர்வாகத்தின் முதல் ஆட்சியில் அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்த வெளியேற்றம் செய்யப்பட்டது.
இந்த வெகுமதி ரத்து, ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது பதவி காலத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்துள்ளது.
மேலும், 2022 முதல் சிறையில் இருந்த அமெரிக்க சுற்றுலாப் பயணியை விடுவிக்க காபூலில் உள்ள தாலிபான் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |