துருக்கி-சிரியா நிலநடுக்கம்…1 மணி நேரத்தில் உயர்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை: அமெரிக்கா அதிர்ச்சி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000-த்தை தாண்டி இருப்பது அதிர்ச்சிகரமானது என அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
துருக்கி - சிரியா நிலநடுக்கம்
துருக்கியின் கஹ்ராமன்மரஸ் மாகாணத்தின் பசார்சிக் நகரில் திங்கட்கிழமை அதிகாலை 4:17 மணியளவில், 7.8 ரிக்டர் என்ற அளவிலான பயங்கரமான நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் மையம் கொண்டு வெளிப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், இன்று காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 12,391 பேர் துருக்கியிலும், 2,992 பேர் சிரியாவிலும் உயிரிழந்துள்ளனர், மேலும் 50,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிர்ச்சி
இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் உண்மையில் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,000-த்தை தாண்டியுள்ளது, மேலும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், 150க்கும் அதிகமான தேடுதல் மற்றும் மீட்பு படையினரை துருக்கிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா துருக்கி மற்றும் சிரியாவிற்கு எவ்வாறு கூடுதல் உதவிகள் வழங்கும் என்பது குறித்து வரும் நாட்களில் வாஷிங்டன் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.