உக்ரைன் மீது அடுத்த இடியை இறக்கிய அமெரிக்கா... ஆதரிக்க வாய்ப்பில்லை என தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வரைவு ஐ.நா. பிரேரணையை ஆதரிக்க முதல் முறையாக அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து மோதல்
குறித்த பிரேரணையானது உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளும் அமெரிக்கா தொடர்புடைய ஐ.நா. பிரேரணையை ஆதரித்து வந்துள்ள நிலையில், தற்போது ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான கருத்து மோதல் அமெரிக்காவை இந்த முடிவெடுக்க வைத்துள்ளது என்றே கூறப்படுகிறது.
அத்துடன், G7 நாடுகளின் குழு அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டிருந்த அறிக்கையில் ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் ஒரு சொற்றொடரையும் அமெரிக்கா எதிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
2022 பிப்ரவரி மாதம் தொடங்கி ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா மன்றம் மற்றும் G7 நாடுகள் பொதுவாகப் பயன்படுத்தும் மொழியை தற்போது அமெரிக்கா ஏற்க மறுப்பது, ஜெலென்ஸ்கி மற்றும் ட்ரம்ப் இடையேயான மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதையே குறிப்பிடுவதாக கூறுகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவரவே ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். அத்துடன், சவுதி அரேபியாவில் அமைதிப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் குழுக்களை அனுப்பினார்.
வாய்ப்பில்லை
ஆனால், உக்ரைனையும் ஐரோப்பிய பிரதிநிதிகளையும் அனுமதிக்க மறுத்தார். உக்ரைனின் நட்பு நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு தங்கள் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்த, போரின் முந்தைய இரண்டு பிப்ரவரி 24 ஆண்டு விழாக்களைப் பயன்படுத்தின.
ஆனால் இந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் ரஷ்ய ஆதரவு போக்கால் அது வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை திங்கட்கிழமை வாக்களிக்க உள்ளது.
பொதுச் சபைத் தீர்மானங்கள் பொதுவாக சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல, ஆனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை, போர் குறித்த உலகளாவிய பார்வையை பிரதிபலிக்கும் வலிமை கொண்டவை.
கடந்த ஆண்டுகளில், உக்ரைனை ஆதரித்து அமெரிக்கா அரணாக நிலைகொண்டது. ஆனால் தற்போது அந்த நிலைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. குறித்த உக்ரைன் ஆதரவு பிரேரணையானது 50க்கும் மேற்பட்ட நாடுகளால் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |