காசா போரால் லாபமடைந்த உலகளாவிய நிறுவனங்கள்: ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கு அமெரிக்கா தடை!
காசாவின் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஃபிரான்செஸ்கா அல்பானீஸுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அல்பானீஸுக்கு அமெரிக்கா தடை
பாலஸ்தீனியப் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஃபிரான்செஸ்கா அல்பானீஸ் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று அல்பானீஸ் தொடர்ந்து வெளிப்படையாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர் ஒரு இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும், மூத்த வழக்கறிஞரும் ஆவார்.
சர்ச்சையை கிளப்பிய அறிக்கை
சமீபத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அல்பானீஸ் சமர்ப்பித்த அறிக்கையில், காசாவில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து உலகளாவிய நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.
இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் அதன் மூலம் ஆதாயம் அடைந்த நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்து கிரிமினல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலைப்பாடு, அவரை மவுனமாக்க டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக "அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக" குற்றம் சாட்டி, இந்தத் தடைகளை அறிவித்தார்.
இதன் காரணமாக, அல்பானீஸ் அமெரிக்காவில் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படும், மேலும் அவர் அமெரிக்காவிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, எப்போதும் போல நீதியின் பக்கமே தான் உறுதியாக நிற்பதாக அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் உள்ளிட்ட பலர் விமர்சித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |