இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த கோரிக்கை... ஐ.நாவில் சிறப்பு அதிகாரத்தால் முறியடித்த அமெரிக்கா
மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த கோரிக்கையை தமது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்துள்ளது.
சிறப்பு உரிமையை பயன்படுத்தி
பிரேசில் முன்வைத்துள்ள இந்த கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் 12 பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா தமது சிறப்பு உரிமையை பயன்படுத்தி முறியடித்ததாக கூறப்படுகிறது.
@reuters
ஹமாஸ் படைகளின் கொடூர தாக்குதலுக்கு கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் தொடர்பில் எவரும் எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் இந்த கோரிக்கையை முற்றாக எதிர்த்துள்ளார். மட்டுமின்றி, ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேலின் தற்காப்பு உரிமை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் பிரித்தானியா கலந்துகொள்ளவில்லை. இரு தரப்பு உயிர்ச்சேதம் குறித்து தாம் வருத்தமடைவதாகவும் தெரிவித்த அமெரிக்கத் தூதர், ஹமாஸின் நடவடிக்கைகளே மனிதாபிமான நெருக்கடியைக் கொண்டு வந்ததாகக் கூறினார்.
ஏமாற்றத்தை தருவதாக சீனா
இருப்பினும் ஜனாதிபதி ஜோ பைடனின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்த கோரிக்கை அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டதற்கு இஸ்ரேல் நன்றி தெரிவித்துள்ளது.
@ap
G7 உறுப்பு நாடுகளில் ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போர் நிறுத்த கோரிக்கையை ஆதரித்திருந்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் ஏமாற்றத்தை தருவதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தொடர்பில் ரஷ்யா முன்வைத்த இரு கோரிக்கைகளும் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவரான பிரேசில், கடந்த 3 நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளது.
தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த போக்கு, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் உண்மை முகம் மீண்டும் அம்பலமானதாக பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜோ பைடன் போர் குற்றவாளி என்றே பலர் சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |