வந்தே பாரத் ரயிலின் அவசர கதவை அலட்சியமாக திறந்த ஊழியர்கள்: பயணிக்கு நேர்ந்த சோகம்
வந்தே பாரத் ரயில் கதவை ஊழியர்கள் திறந்ததால், பயணி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணி உயிரிழப்பு
தமிழக மாவட்டம், செங்கல்பட்டு கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (70). இவரது மனைவி ரோஸ் மார்க்ரேட்.
இவர்கள் இருவரும் சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது, நேற்று மாலை 6.05 மணிக்கு ரயில் சேலம் சென்றுள்ளது.
அப்போது, ரயிலின் அவசர கதவு அருகே பவுலேஷ் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென அவசர கதவு திறந்ததால், மறுபுறத்தில் உள்ள 5 -வது நடைமேடையில் பவுலேஷ் கீழே விழுந்துள்ளார். இதனால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரச கதவை திறந்த ஊழியர்கள்
இந்த விபத்து காரணமாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் அவசர கதவை திறந்து, மறுபுறத்தில் உள்ள 4 -வது நடைமேடைக்கு இறங்கி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்த கதவின் அருகே பவுலேஷ் சென்று கை வைத்ததால் அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதில், ரயில்வே ஊழியர்கள் தாமரைச்செல்வன், ஒய்.எஸ்.மீனா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரியவந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |