விஜயகாந்துக்கு மெரினா பீச்சில் பத்துக்கு பத்து இடம் கொடுங்க: தொண்டர்கள் வேண்டுகோள்
மறைந்த விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கொடுங்கள் என்று தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மறைந்தார் விஜயகாந்த்
கடந்த செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் இன்று காலை காலமானார்.
விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு, ரசிகர்கள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் விட்டு அழுகின்றனர்.
மெரினாவில் இடம் வேண்டும்
இந்நிலையில், விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
முன்னாள் முதலமைச்சர்களான, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உடல்கள் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவரது உடலையும் அங்கு அடக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். பத்துக்கு பத்து அளவில் இடம் தந்தால் மட்டும் போதும் என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |