ஐ.நா சபையில் பேசிய நித்யானந்தாவின் சிஷ்யை! கனடாவில் படித்தவரா? குழப்பத்தை ஏற்படுத்திய சுயவிவரம்
ஜெனீவாவில் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் சிஷ்யை பங்கேற்ற விடயம் வைரலாகியுள்ளது.
கைலாசா தேசம்
இந்திய காவல்துறையிடம் இருந்து தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கைலாசா எனும் நாட்டை நிறுவியதாக தெரிவித்தார்.
இதுவரை தீவு தேசமாக கருதப்படும் கைலாசா எங்கு இருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் ஜெனீவாவின் ஐ.நா பொதுமன்றத்தில் நடந்த கூட்டத்தில், கைலாசா தேசத்தில் இருந்து உறுப்பினராக விஜயப்பிரியா என்பவர் உரையாற்றி இருக்கிறார்.
ஐ.நாவுக்கான கைலாசத்தின் நிரந்தர தூதர் என்று கூறிய அவர், கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.
யார் இந்த விஜயப்பிரியா?
அமெரிக்காவில் வசிப்பதாக கூறப்படும் விஜயப்பிரியா, 2014ஆம் ஆண்டு கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் படித்தார்.
இந்த தகவல்கள் LinkedIn சுயவிவரத்தில் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவர் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோல் மொழிகளில் சரளமாக பேசிக் கூடியவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஐ.நா சபை விளக்கம்
இதற்கிடையில், விஜயப்பிரியா பேசியது வைரலாகியுள்ள நிலையில் ஐ.நா சபை அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளது. ஐ.நா சபை கூறுகையில், 'பொது விவாதங்கள் என்பது நேரில் பங்கேற்க மற்றும்/அல்லது எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை வழங்க ஆர்வமுள்ள எவருக்கும் திறந்திருக்கும் பொதுக் கூட்டம் ஆகும்.
ஒரு பொது விவாதத்தின் நோக்கம், அந்தந்த குழுக்களின் சுயாதீன நிபுணர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்கவும் அனுமதிப்பதாகும்.
ஒரு பொதுக் கருத்தின் வரைவு, இது குறிப்பிட்ட பிரச்சனைகள் அல்லது கருப்பொருள்கள் மீதான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் அரசுகளுக்கு உதவுவதற்கான வழிகாட்டியாகும்.
பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழுவில் அவர்கள் எழுதிய எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பு பொது விவாதத்தின் தலைப்புக்கு பொருத்தமற்றது என்பதால் அது வெளியிடப்படாது' என தெரிவித்துள்ளது.