4 நிமிடங்கள் தாமதமான விசா: ஒரு வருட சேமிப்பையும் கனவையும் தொலைத்த குடும்பம்
பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் பகுதியில் விசா கிடைக்க 4 நிமிடங்கள் தாமதமானதால் 75 வயதான பெண் ஒருவரும் அவரது 15 வயது பேத்தியும் ஒரு வருட சேமிப்பையும் கனவையும் தொலைத்துள்ளனர்.
கப்பலில் உல்லாசப் பயணம்
சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து உல்லாசக் கப்பல் புறப்பட்டுச் செல்வதை அவர்கள் கண்ணீருடன் பார்த்து நின்றுள்ளனர்.
ஸ்கொட்லாந்தை சேர்ந்த ஆன் கான்வே மற்றும் அவரது பேத்தி லீலா கான்வே ஆகியோர் ஜூலை 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கிற்கு இரண்டு வார காலம் குனார்ட் சொகுசு கப்பலில் உல்லாசப் பயணம் செல்லவிருந்தனர்.
ஆனால் விசா தொடர்பான தேவைகளை அவர்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. அதாவது 16 வயதுக்கு உட்பட்டவர்கள் வயதுக்கு மூத்தவர்களுடன் பயணம் செய்யும் போது ESTA விசா தேவை என்பது அவர்களுக்கு சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் வைத்தே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணையமூடாக ESTA விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். 5 மணிக்கு கப்பல் கட்டாயம் புறப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கான விசா 5.04 மணிக்கு கிடைத்துள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கப்பல் 5 மணிக்கு புறப்பட்டு செல்ல, பாட்டியும் பேத்தியும் செய்வதறியாது கண்ணீருடன் பார்த்து நின்றுள்ளனர். லீலா GCSE முடித்துள்ளதை அடுத்து ஆன் கான்வே தமது பேத்தியுடன் கப்பல் பயணம் ஒன்றை முன்னெடுக்க முடிவு செய்துள்ளார்.
குனார்ட் சொகுசு கப்பல்
இதனையடுத்து தமது ஓராண்டு சேமிப்பை செலவிட்டு உல்லாசப் பயணத்திற்கு முன்பதிவு செய்துள்ளார். டிக்கெட் கட்டணம் 3,934 பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே நெகிழவைக்கும் திருப்பமாக ஆன் கான்வேயின் இன்னொரு பேத்தியான 28 வயது பெத்தானி வில்லியம்ஸ் துரிதமாக செயல்பட்டு, 48 மணி நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து 1,720 பவுண்டுகளை திரட்டியுள்ளார்.
அந்த தொகையில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு லீலாவுக்கும் பாட்டிக்கும் விமான பயணம் ஏற்பாடு செய்துள்ளார். நியூயார்க்கில் இருந்து ஜூலை 27ம் திகதி குறித்த கப்பலில் அங்கிருந்து புறப்படும் வகையில் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
லீலா மற்றும் ஆன் கான்வே தங்கள் பயணத்தை நியூயார்க்கில் இருந்து தொடங்கட்டும் என திட்டமிட்டதால், பெத்தானிக்கு சுமார் 1,500 பவுண்டுகள் அதிகமாக செலவாகியுள்ளது.
அதை தாம் பொருட்படுத்தவில்லை என்றும், தமது பாட்டியும் லீலாவும் அவர்கள் விரும்பிய கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்ததில் தாம் மிகுந்த மன நிறைவு அடைவாதாக பெத்தானி குறிப்பிட்டுள்ளார்.
நடந்தவற்றை அறிந்து வருத்தம் தெரிவித்துள்ள குனார்ட் சொகுசு கப்பல் நிர்வாகம், உரிய ஆவணங்கள் கட்டாயம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |