அருவியில் குளிக்க சென்ற குடும்பம்... தாயார், மகள் உட்பட மூவர் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்
பிரேசில் நாட்டின் ரிவா அருவியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயார், மகள் உட்பட மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் பிரபலமான ரிவா அருவியில் ஏப்ரல் 21ம் திகதியே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதில் 46 வயதான ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி, 9 வயதான மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி மற்றும் ஆண்ட்ரியாவின் சகோதரியின் கணவர் 44 வயதான Cid de Padua ஆகியோர் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று ஆண்டிரியாவின் குடும்பமானது தங்களது 4 உறவினர்களுடன் ரிவா அருவியில் குளிக்க சென்றுள்ளனர்.
இதில் ஆண்ட்ரியாவும் மகளும் உறவினரும் மரணமடைந்த நிலையில், எஞ்சிய நால்வர் கடும் போராட்டத்திற்கு பின்னர் கரை சேர்ந்துள்ளனர்.
திடீரென்று நீர் நிரப்பு அதிகரித்ததும், மழை காரணமாக அருகாமையில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும், ரிவா அருவியில் தண்ணீர் பெருக்கெடுக்க காரணமாக அமைந்துள்ளது.
நீருக்கடியில் பாறைகளில் ஆண்ட்ரியாவின் தலைமுடி சிக்கிக்கொண்டதே அவர் உயிர் தப்ப முடியாமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சடலங்களை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் ஆண்ட்ரியாவின் குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது. அருவியில் குளிக்க துவங்கும் முன்னர் மகளுடன் ஆண்ட்ரியா எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அஞ்சலி செலுத்தப்படுகிறது.