உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எதுவென்று தெரியுமா..! இந்தியா படைத்துள்ள சாதனை
நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ரயில் பயணங்களையே நாம் பயன்படுத்தும் நிலையில், உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எதுவென்று தெரியுமா?
உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்
உலக அளவில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாக ரயில் போக்குவரத்து பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு மட்டும் சுமார் 500 கோடி மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர், அத்துடன் 350 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் ரயில் போக்குவரத்து மூலம் இடமாற்றம் செய்யப்படுகிறது.
இத்தகைய ரயில் போக்குவரத்தின் முக்கிய அம்சமாக ரயில் நிலையங்கள் காணப்படுகிறது, உலகில் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன, இந்த ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் சில சிறப்பு அம்சங்களை தனக்கென கொண்டுள்ளன.
அப்படி இருக்கையில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் பெற்றுள்ளது.
1903ம் ஆண்டில் இருந்து 1913ம் ஆண்டில் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், மொத்தம் 44 நடைமேடைகளை கொண்டுள்ளது, அப்படியென்றால் இந்த நிலையத்தில் ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தி வைக்க முடியும்.
இந்த ரயில் நிலையத்தின் வழியாக தினசரி 660 மெட்ரோ ரயில்கள் பயணங்களை மேற்கொள்கின்றன. மேலும் 1,25,000 பயணிகள் நாள் ஒன்றுக்கு இந்த ரயில் நிலையத்தின் வழியாக பயணம் மேற்கொள்கின்றனர்.
இதில் இரண்டு நிலைகள் அண்டர் கிரவுண்ட் பகுதிகளும், ரகசிய நடைமேடை தளமும் உள்ளது, இந்த ரகசிய நடைமேடை தளம் வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு கீழே அமைந்துள்ளது.
உலகின் மிக நீளமான ரயில் நிலைய நடைமேடை
உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை தொடர்ந்து, உலகின் மிக நீளமான ரயில் நிலைய மேடை இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது.
இந்த நடைமேடை சுமார் 1,507 மீட்டர் நீளம் கொண்டது, இந்த நடைமேடையை சமீபத்தில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையம் எதுவென்றால் ஹவுரா சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது, இதில் 26 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |